×

தெலங்கானாவில் கிராம மக்கள் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு விஷ ஊசி போட்டு 70 தெரு நாய்கள் கொன்று புதைப்பு

*வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் விசாரணை

திருமலை : தெலங்கானாவில் கிராம மக்கள் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்து, விஷ ஊசி போட்டு 70 தெரு நாய்களை கொன்று புதைத்ததாக வீடியோ ஆதாரத்துடன் வந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், ஆளூர் மண்டலம் மச்செர்லா கிராமத்தில் அதிக அளவில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த தெரு நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்களை துரத்தி கடித்து வந்தது. இதனால் தெருவில் குழந்தைகள் விளையாட செல்லவும் அச்சப்படுகின்றனர்.

எனவே இதனை தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்தனர். இதனால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தெரு நாய்களை ஒழிக்க கடந்த 18ம் தேதி ஒரு சிறப்பு குழுவினரை வரவழைத்து தெருவில் உள்ள மொத்தம் 70 நாய்களுக்கும் விஷ ஊசி போட்டு கொன்றுள்ளனர். பின்னர் இறந்த நாய்களின் சடலங்களை ஊருக்கு வெளியே பெரிய பள்ளம் தோண்டி புதைத்தனர்.

இதனை அறிந்த ஐதராபாத்தில் உள்ள ஸ்ட்ரே அனிமல் பவுண்டேஷன் ஆப் இந்தியா மற்றும் ப்ரீத் அனிமல் ரெஸ்க்யூ ஹோம் ஆகிய இரண்டு அமைப்பினர் நாய்கள் புதைக்கப்பட்டதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனையடுத்து விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி 429(எந்தவொரு விலங்கையும் கொல்வதன் மூலம் தீங்கு விளைவிப்பது) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தெலங்கானாவில் கிராம மக்கள் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு விஷ ஊசி போட்டு 70 தெரு நாய்கள் கொன்று புதைப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Panchayat ,Punchayat ,
× RELATED சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக...